‘நல்லவேளை இத பண்ணது நல்லதா போச்சு’.. ‘திரும்ப வருவோம்’.. தோல்விக்கு பின் ‘தல’யின் உருக்கமான பேச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 08, 2019 12:37 AM
தகுதிசுற்று ஒன்றில் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் லீக்கின் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தகுதிசுற்று 1 நேற்று(07.05.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதில் அம்பட்டி ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19 ஓவரின் தோனி தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அசத்தினார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 18.3 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சூர்யக்குமார் யாதவ் 71 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை அடுத்து போட்டி முடிந்த பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி,‘ஹோம் கிரவுண்ட்டில் 6 முதல் 7 போட்டிகளில் விளையாடியுள்ளோம். மைதானத்தை பற்றி இன்னும் சரியாக தெரிந்திருந்திருக்க வேண்டும். பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக விளையாடியிருக்கலாம். அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அதிர்ஷ்டவசமாக புள்ளிப்பட்டியலில் முதல், இரண்டு இடங்களில் இருந்ததால் எங்களுக்கு விளையாட இன்னொரு வாய்ப்பு உள்ளது’ என தோனி பேசியுள்ளார்.
