'டி20 போட்டியில் முத்திரை பதித்த 2 தமிழர்கள்’... ‘தெறிக்கவிட்ட இந்திய அணியின் மாற்று வீரர்’... ‘போராடி தோற்றுப்போன ஆஸ்திரேலியா அணி’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜடேஜா மட்டுமே ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றது. இதனால் ஆட்டம் கைவிட்டு போகிவிடுமோ என்ற நிலை இருந்தது. இந்நிலையில், ஜடேஜாவின் காயம் காரணமாக, மாற்றுவீரராக களமிறக்கப்பட்ட யுவேந்திர சாஹல் மற்றும் நடராஜன் ஆகியோர் குறைந்த ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதிலும் நடராஜன் மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆக்கி தனது முதல் சர்வதேச டி20 விக்கெட்டை பதிவுசெய்தார். மேலும் ஆர்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார். மொத்தம் 4 ஓவரில் 30 ரென்கள் கொடுத்து, அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் நடராஜன் வீழ்த்திய 3 விக்கெட்டுகளுமே திருப்புமுனையான விக்கெட்டுகள்.
சர்வதேச வீரர்களைத் தனது யார்க்கர் பந்துவீச்சால் திணறடிக்கும் மிட்ஷெல் ஸ்டார்க்கையே யார்க்கர் மூலம் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார் தமிழக வீரர் நடராஜன். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், 4 ஓவருக்கு 16 ரன்கள் மட்டுமே கொடுத்து, ரன்களை கட்டுப்படுத்தி பெரிதும் உதவினார். இதனால் இந்திய அணி தனது முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் இரு தமிழர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து முத்திரை பதித்தனர்.