"தார தப்பட்ட கிழிய போகுது..." 'நடராஜன்' குறித்து வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்... மகிழ்ச்சியில் 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் ஏழாம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த போதும் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் அணியில் வெளியேயுள்ள சைனி அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், சைனிக்கு பதிலாக நடராஜன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகலாம் என தகவல்கள் பரவி வருகிறது. தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரஹானேவும் நடராஜனை களமிறக்க தான் அதிகம் விரும்புவதாக தெரிகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த வருண் சக்கரவர்த்திக்கு மாற்று வீரராக நடராஜன் அணியில் இடம் பிடித்தார். தனக்கு சர்வதேச அணியில் கிடைத்த முதல் வாய்ப்பையே சிறப்பாக பயன்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் மீது திரும்பி பார்க்க வைத்தார்.
அதே போல, டெஸ்ட் தொடருக்கான வலைப் பயிற்சியின் போதும் நடராஜன் மிகவும் சிறப்பாக வீசி வருகிறார் என்றும், ரஹானே, புஜாரா போன்ற பேட்ஸ்மேன்கள் கூட அவரது பந்தை சமாளிக்க திணறுவதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல் ஒன்று வெளி வந்திருந்தது. இதனால் சைனி அடுத்த போட்டியில் களமிறங்குவதை விட நடராஜனுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
அதே போல, ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் தற்போது குவாரன்டைன் இருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் அவர் அணியில் இணைவார் என தெரிகிறது. இரண்டு போட்டிகளாக ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ராகுலும் அடுத்த போட்டியில் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோஹித், ராகுல் உள்ளே வரும் பட்சத்தில் மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் வெளியே அமர்த்தப்படலாம்.