‘தோனி மட்டும்தான் சிறந்த கேப்டன் என சொல்வது’... ‘தவறானது என்று கூறிய முன்னாள் வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 18, 2019 09:39 PM
தோனி மட்டும் தான் இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறுவது சரியானது அல்ல என்றும், அவரைவிட சிறந்த கேப்டன்கள் நிறைய பேர் உள்ளனர் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கவுதம் கம்பீர், ‘புள்ளி விபரங்களை எடுத்து பார்த்தால், தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறலாம், ஆனால் வெறும் புள்ளி விபரங்களை வைத்து கொண்டு, தோனி மட்டும் சிறந்த கேப்டன், மற்றவர்கள் திறமையற்றவர்கள் என்று கூறுவது சரியானது அல்ல. தோனியை விட திறமையான கேப்டன்களும் உள்ளனர். முன்னாள் கேப்டனான கங்குலி மிகச்சிறந்த கேப்டன். அவர் தலைமையில் தான், அயல்நாடுகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
அதே போல் விராட் கோலி தலைமையில், இந்திய அணி ஒருநாள் இன்னிங்சை, தென் ஆப்ரிக்காவிலும் மற்றும் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணிலும் கைப்பற்றியுள்ளது. தோனி இந்திய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளை (2007, 2011) பெற்று கொடுத்துள்ளார் தான். அதற்காக தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது. வெற்றியும், தோல்வியும் கேப்டனை மட்டுமே சாராது. அது ஒட்டுமொத்த அணிக்கும் தான் சேரும். அதே போல், அணில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
