‘அன்று எங்க 3 பேருக்கும் சொன்னது’... ‘இன்று அவருக்கும் பொருந்தும்’... கம்பீர் கருத்து!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 19, 2019 11:01 AM
‘அன்று எனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு சொன்னதுதான், இன்று தோனிக்கும் பொருந்தும்’ என்று முன்னாள் வீரரும், தற்போதைய எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கம்பீர் கூறுகையில் ‘தற்போது எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, மிகவும் முக்கியமானது. தோனி கேப்டனாக இருந்தபோது, வருங்காலத்தைப் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் தோனி என்ன சொன்னார் என்பதை நான், இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, நான், சச்சின், சேவாக் ஆகியோர் ‘சிபி சீரிஸ்’ தொடரில் இணைந்து விளையாட முடியாது.
மைதானங்கள் பெரியதாக இருப்பதால், பீல்டிங் செய்ய இயலாது என்று கூறினார். அவர், அடுத்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், எங்கள் மூவருக்கும் பதிலாக, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி வருகிறார் என்பதை, வெளிப்படுத்தத்தான் அவ்வாறு கூறினார். உணர்ச்சிகளுக்கு இடமளிப்பதை விட , நடைமுறைக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பது அவசியம்.
தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும். ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த நபரை தேர்வு செய்யலாம். அப்டி செய்தால் அடுத்த உலகக் கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்து விடலாம்’ என்றார்.
