"என் குரு எப்போவுமே சச்சின் தாங்க".. உருக்கமாக பேசிய தல தோனி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல் எப்போதுமே சச்சின் தான் என உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பேசும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
மைதானம்
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள தோனிக்கு சொந்தமான எம்.எஸ் தோனி குளோபல் ஸ்கூல்-ல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கப்பட்டது. இந்த மைதானத்தை திறந்துவைத்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான குளோபல் பள்ளியின் இணைப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார் தோனி. அப்போது ஒருவர், "உங்களுடைய கிரிக்கெட் ரோல் மாடல் யார்?" எனக் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த தோனி ,"கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் தான். நானும் உங்களைப் போலவே தான் இருந்தேன். சச்சின் விளையாடுவதைப் பார்த்து, எப்போதும் அவரைப் போல விளையாட வேண்டும் என்று நினைத்தேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன். என்னால் அவரைப் போல விளையாட முடியாது என்று. ஆனால் என் இதயத்தில், எந்த ஆசை எப்போதும் இருக்கும்" என்றார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.