வானவில் பார்த்திருப்போம் இது புதுசா இருக்கே.. வாக்கிங் போன போட்டோகிராஃபர் வானத்துல பார்த்த காட்சி.. வைரல் PIC -ன் விநோத பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த மூடுபனி சூழ்ந்த வானத்தின் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பனி படர்ந்த வேளைகளில் வெளியே சென்று உலாவிவிட்டு வர பலருக்கும் பிடித்திருக்கும். அந்த இதமான சூழ்நிலை காரணமாக அவ்வேளையில் வாக்கிங் செல்ல விரும்புவது உண்டு. அப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்றபோது வானத்தை பார்த்திருக்கிறார். பல நிறங்கள் இல்லாத வானவில் எப்படியிருக்கும்? அப்படி வெண்மை நிறத்தில் வானவில் போல வட்டம் தோன்றியுள்ளது. அதனை கண்டு ஆச்சரியமடைந்த அவர் உடனே அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஸ்டூவர்டு பெர்மன். புகைப்பட கலைஞரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது வானில் தோன்றிய வித்தியாசமான காட்சியை புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்டூவர்டு பெர்மன்.
இதுகுறித்து அவர் அந்த பதிவில்,"நான் வாக்கிங் சென்றபோது இந்த அற்புதமான காட்சியை கண்டேன். இது ஒரு Fogbow. இதற்கு முன்னர் இதுபோன்ற காட்சியை நான் கண்டதில்லை. இவையும் வானவில் போன்றவை தான். பொதுவாக வனவில்கள் சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தோன்றும். இவையும் அப்படிதான். மூடுபனியில் உள்ள நீர்த்துளிகள் சிறியதாக இருக்கும் நேரத்தில் இதனை தெளிவாக பார்க்கலாம். மேகங்களில் இருக்கும் மழை நீர்த்துளிகள் மீது சூரிய ஒளி பட்டு வானவில் தோன்றும். அதேபோல மூடுபனியில் உள்ள நீர்த்துளிகள் மீது சூரிய ஒளி பட்டு இந்த Fogbow தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் 15 முதல் 20 நிமிடங்கள் அங்கேயே நின்று அதனை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், அப்போதும் அந்த காட்சி மறையவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் பெர்மன். இந்நிலையில், அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.