‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி தேர்வு எப்போது’??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 16, 2019 08:57 AM
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, வருகிற 19-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் முதல் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 3-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டி தொடர் செப்டம்பர் 3-ந் தேதி முடிவடைகிறது.
வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு, மும்பையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர். கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு 20 ஓவர், ஒருநாள் போட்டி ஆகியவைகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்ட வந்தநிலையில், அவர் குணம் அடைந்து விட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதேபோல் உலகக் கோப்பையில், அதிக விமர்சனங்களுக்கு உள்ளான தோனி அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை போட்டியில் தோனி சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு குறித்து தோனி தான் முடிவு செய்ய முடியும்’ என்று கூறினார்
மேலும் லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. வரும் 19-ந்தேதி அன்று அனைத்தும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.