'ஸ்லோவா ஆடுறாரா?'.. 'மொத்த பிரஷரையும் எடுத்துக்குறாரு’ .. 'நாங்க கத்துக்கணும் அவர்ட்ட'.. நெகிழும் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 28, 2019 05:00 PM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாண்ட இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தோனியின் புரிதலும், அணியின் பிரஷரை அவர், தனக்கான பிரஷராக எடுத்துக்கொண்டதுதான் காரணம் என்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாண்ட மேட்சில், தோனியின் ஸ்லோவான ஆட்டம், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பலராலும் விமர்சிக்கப்பட்டது. காரணம், 84 பந்துகளில் 57 ரன்களை மட்டுமே தோனி- கேதர் ஜாதவ் கூட்டணியின் ஸ்லோவான ரன் ரேட்டிங். அதிலும் தோனி 52 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தோனி ஹர்திக்குடன் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்களை, அதாவது, 61 பந்துகளில் 56 ரன்களை எடுத்துள்ளார். இதுபற்றி பேசிய பும்ரா, ‘தோனியின் ஸ்லோவான ஆட்டம் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த போட்டியில் 268 ரன்கள் என்கிற ஸ்கோரை இந்தியா எட்டுவதற்கு தோனியின் நிதானமான ஆட்டம்தான் காரணமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘விக்கெட்டுகளை விரைவாக இழக்கும் இதுபோன்ற ஆட்டங்களில், தோனி அனைவரின் பிரஷரையும் தான் எடுத்துக்கொள்கிறார் என்பதை எங்களால் காண முடிகிறது. இதற்கு விளையாட்டின் போக்கைப் பற்றிய அவருடைய ஆழ்ந்த புரிதல்தான் காரணம். இளையவர்களான நாங்கள் இதனை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறோம்’ என்று பேசியுள்ளார்.