"அந்த மேட்ச்-க்கு பிறகு.. பாகிஸ்தான்ல ஒரு கடைக்கு போனா கூட...".. முகமது ரிஸ்வான் சொன்ன உருக்கமான தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறி இருந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
இதற்கு மிக முக்கிய காரணம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது தான்.
அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு விக்கெட்டை கூட இந்திய அணி கைப்பற்றவே இல்லை.
முதலில் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக ஆடி ஒரு விக்கெட் கூட விழாமல் பார்த்துக் கொண்டனர்.
முகமது ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 68 ரன்களும் எடுக்க 18-வது ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனையும் புரிந்திருந்தது. ஒரு விக்கெட் கூட எடுக்காமல் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்ததால் இன்று வரை இந்திய அணியின் தோல்வி குறித்து பல கருத்துக்கள் பேசப்பட்டு தான் வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வெற்றியாக இந்த உலக கோப்பை வெற்றி கருதப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக தற்போது நினைவுகூர்ந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான், "இந்திய அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்ற போது அது எனக்கு ஒரு போட்டியாக மட்டுமே இருந்தது. ஏனென்றால் அந்த போட்டியில் மிக எளிதில் வெற்றி பெற்று விட்டோம். ஆனால் நான் பாகிஸ்தானுக்கு திரும்பிய போது தான் அந்த வெற்றி அங்குள்ள மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உணர்ந்தேன்.
நான் எந்த ஒரு கடைக்கு போனாலும் அங்கு இருப்பவர்கள் என்னிடம் இருந்து பணமே வாங்கவில்லை. நீங்கள் போங்கள், உங்களிடம் பணம் வாங்க மாட்டோம் என்றும் இங்கே உங்களுக்கு எல்லாம் இலவசம் என்றும் மக்கள் கூறினார்கள். அந்த அன்பு நான் எதிர்பார்க்காத ஒன்று" என தெரிவித்துள்ளார் முகமது ரிஸ்வான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அற்புதமாக ஆடி வரும் முகமது ரிஸ்வான், தொடர்ந்து பல்வேறு சாதனைகளையும் டி20 போட்டிகள் உள்ளிட்டவற்றில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.