‘இது எங்க வேர்ல்டு கப் எப்டி ஜெயிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..’ இந்தியா - இங்கிலாந்து போட்டி குறித்து நம்பிக்கை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 26, 2019 04:04 PM
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணி அடுத்ததாக இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது.

உலகக் கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால் அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க கடுமையாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ், “இது எங்களின் உலகக் கோப்பை. அதை எப்படி வெல்ல வேண்டுமென எங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு போட்டியின் முடிவுகள் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துவிட்டது. நாங்கள் எளிதில் எங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். வலிமையான பேட்டிங் கொண்ட ஒரு அணி அப்படி இழக்கக்கூடாது. ஆனால் நாங்கள் எங்கள் கேம் பிளானை மாற்றப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டி பற்றிப் பேசியுள்ள அவர், “இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் சிறந்த அணி என்பதையும் அவர்களின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் அறிந்து வைத்துள்ளோம். அவர்களுக்கு எதிராக எங்கள் பெஸ்டைக் கொடுப்போம்” எனக் கூறியுள்ளார்.
