‘அவரு வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவாரு..’ தோனிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 25, 2019 06:19 PM
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் தோனியின் பேட்டிங் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த தோனி இதுவரை ஆடிய 4 லீக் ஆட்டங்களில் ஒரு போட்டியிலும் சிறப்பாக ஸ்கோர் செய்யவில்லை. 4 போட்டிகளில் மொத்தமாக தோனி 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் தோனி பற்றிப் பேசியுள்ள முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல், “உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் முன்பு இந்திய அணியில் முக்கியமானவர் யார் எனக் கேட்டிருந்தால் அது தோனி என்று தான் கூறியிருப்பேன். அவரின் பேட்டிங் ஃபார்ம் குறித்துப் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை சற்று பொறுமையாக இருங்கள், அதன்பின் பாருங்கள் என்பதுதான் என்னுடைய பதில். தோனி சாதாரண வீரராக மட்டும் அணியில் இல்லை. கேப்டன் விராட் கோலிக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியமான அழுத்தமான நேரங்களில் ஆலோசனைகள் வழங்குவது, ஃபீல்டிங் அமைப்பை மாற்றுவது என பல்வேறு வெற்றிக்கான விஷயங்களில் ஈடுபடுகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியும், ஜாதவும் முதிர்ச்சியற்று இருந்தார்கள் என்றாலும் அந்த சூழலை உணர்ந்து சமாளித்து பேட் செய்தார்கள். ஒரு தொடரை வெல்ல வேண்டுமானால் ஒரு அணி சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும். இந்திய அணி தொடக்கத்திலிருந்தே சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள், சரியான நேரத்தில் தோனி எழுவார். இந்த உலகக் கோப்பையை தோனி அவரின் வாழ்க்கையில் உச்சத்தில்தான் முடிப்பார்” எனக் கூறியுள்ளார்.
