'அதெப்படி சொல்லலாம்?' வறுக்கும் ரசிகர்கள்.. 'அவர் நல்ல பேட்ஸ்மேன்' - கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 26, 2019 01:21 PM

இந்திய உலகக்கோப்பை அணி இதுவரை ஆடிக்கொண்டிருந்ததெல்லாம், சட்டமன்றத் தேர்தல்தான். ஆனால் 40 தொகுதி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான வலிமைக்கு நிகரான வலிமை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் என அடுத்தடுத்து, ‘ஏய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ வகையறா அணிகளுடன் மோதும்போது இந்தியாவுக்குத் தேவைப்படச் செய்கிறது.

Dhoni Fans trolls sachin tendulkar for his critic over Dhoni

இந்திய அணியும், ‘பாக்கதானே போறீங்க.. இந்த இந்தியாவோட ஆட்டத்த’ என்று படு கடினமாக பயிற்சிகளையும் முயற்சிகளையும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது. ஆனாலும் கேப்டன் கோலி தலைமையிலான அணிக்கு, தளபதியாக இருந்து ஆலோசனைகள் சொல்லி, அணியை வழி நடத்தவும், இளைய ஆற்றல்களுக்கு வழிவிட்டு அணியை வலுப்பெறவும் செய்ய வேண்டிய பொறுப்பு 'தல' தோனியிடம் இருக்கிறது என்பது நிதர்சனம்.

2011-ஆம் ஆண்டு, உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டனாக இருந்த அனுபவம், 2015-ஆம் ஆண்டு அரையிறுதி வரை இந்திய அணியை அழைத்துச் சென்ற அனுபவம் என உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனிதான், தற்போதைய அணியின் சீனியராக இருக்கிறார் என்கிற பட்சத்தில் அவர் கோலியுடன் களத்தில் கைகோர்த்து நின்று, ‘ஷோல்டரை ஏற்ற சொல்வதற்கும், இறக்க சொல்வதற்குமான’ தகுதி இருப்பவராகிறார்.

உலகக் கோப்பைக்கு முன்புவரை, 9 ஒருநாள் போட்டிகளில், 8 இன்னிங்ஸில் தோனி பேட்டிங் செய்துள்ளார். இதில் அவர் ஸ்கோர் செய்தது மொத்தமாக 327 ரன்கள். மேக்ஸிமம் 87 ரன்களில் நாட் அவுட், உலகக் கோப்பைக்கு முன்புவரை 6 சிக்ஸர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 3 அரைசதங்கள் என பெர்ஃபார்மன்ஸிலும் முன்னேறினார். அவரது எவர் கிரீன் மின்னல் வேக ஸ்டெம்பிங்கை பார்க்கும்போது கூட, ‘இவருக்கு இன்னும் வயசாகல’ என்று ரசிகர்கள் சொல்லத் தவறவில்லை.

இந்நிலையில்தான், கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாண்ட போட்டியில் தோனியின் பேட்டிங் ஸ்டைல் திருப்திகரமாக இல்லை என சச்சின் விமர்சித்தார். அவ்வளவுதான், மளமளவென சச்சினுக்கு எதிரான ட்ரோல்களும் கண்டனங்களும் சமூக தளங்களில் குவியத் தொடங்கின. சச்சினின் உலகக்கோப்பைக் கனவை நனவாக்கியதே தோனிதான்,தோனிக்கு எப்படி சச்சின் அட்வைஸ் செய்யலாம்? என அவ்வப்போது புள்ளிவிவரங்களுடன், ‘நெனைச்சு நெனைச்சு’ ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

எது எப்படியோ, சச்சினுக்கு முன்பே, தோனி 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென்றால், தனது விளையாட்டு முறையை மாற்ற வேண்டும். ஆனால் அதை அவர் சரிவர செய்வதில்லை என 2018-ஆம் ஆண்டில் விமர்சித்த சவுரவ் கங்குலி, தற்போது தோனி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி ‘எல்லாவற்றுக்கும் மேலாக தோனி ஒரு நல்ல பேட்ஸ்மேன். அதை இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் நிரூபிப்பார்’ என்று கங்குலி கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #MSDHONI #SACHINTENDULKAR