‘நான் அத சொன்னா சிரிப்பாங்க..’ ஃபிட்னஸ் ரகசியத்தைப் பகிர்ந்த இந்தியாவின் ஹீரோ ப்ளேயர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 25, 2019 04:14 PM
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இறுதி ஓவரில் யாக்கர்களை வீசி தனது முதல் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் முகம்மது ஷமி. உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததில் உலகளவில் 10வது வீரர், இந்தியாவைப் பொறுத்தவரை 2வது வீரர் இவர். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சேட்டன் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதற்குப் பிறகு 32 ஆண்டுகள் கழித்து முகம்மது ஷமிதான் அந்த சாதனையைச் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு முகம்மது ஷமியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சூதாட்டப்புகார், வரதட்சணைக் கொடுமை, பிற பெண்களுடன் தொடர்பு எனப் பல புகார்களைத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணியிலும் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சூதாட்டப் புகாரை விசாரித்து எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என பிசிசிஐ அவரை மீண்டும் அணியில் சேர்த்தது. ஆனால் காயம் காரணமாக கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்பின் தொடர்ச்சியாக அதிகரித்த உடல் எடையால் அணித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளான ஷமி தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உடல் எடையைக் குறைத்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இடம்பிடித்த அவர் தற்போது உலகக் கோப்பையிலும் இடம்பிடித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள அவர், “காயத்துக்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன். நீண்ட நேரம் தொடர்ந்து பந்து வீசினால் முழங்காலில் இறுக்கம் ஏற்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து விளையாட கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்து எனது உணவின் அளவைக் குறைத்தேன். என் உணவுமுறை பற்றிக் கூறினால் எல்லோரும் சிரிப்பார்கள். இனிப்பு வகைகள், பிரட் இரண்டையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதுதான் எனக்கு மிகவும் உதவி செய்தது” எனக் கூறியுள்ளார்.