"நான் மட்டும் 'கோலி'யா இருந்தா.. நிச்சயம் அப்படி ஒரு முடிவ தான் எடுப்பேன்.. யோசிக்க 'இது'ல என்ன இருக்கு??.." 'முன்னாள்' வீரர் பகிர்ந்த 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் (Ashwin) மற்றும் ஜடேஜா (Jadeja) ஆகியோர், ஒரு சமயத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வந்தனர்.
அதன் பிறகு, சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற ஆரம்பித்ததும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு டெஸ்ட் தவிர மற்ற தொடரிலான வாய்ப்பு குறைந்து போனது. இதில், ஜடேஜாவுக்கு, மற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தாலும், அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், தங்களது பந்து வீச்சில் சற்று சொதப்பியே வருகின்றனர். மேலும், இந்தாண்டு இந்தியாவில், டி 20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளதால், இந்திய அணியில் இடம்பெறப் போகும் சுழற்பந்து வீச்சாளர்கள் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
அதே போல, ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருவதால், இதில் சிறப்பாக ஆடும் சுழற்பந்து வீச்சாளர்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் (Monty Panesar), இந்திய அணிக்கு எந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
'ஐபிஎல் தொடர், சாஹல் மாற்று குல்தீப் ஆகியோருக்கு மிகப்பெரிய விஷப் பரீட்சை ஆகும். அப்படி இருவருக்கும் இந்த ஐபிஎல் சீசன் மோசமாக அமைந்தால், டி 20 உலக கோப்பைக்கான அவர்களின் இடம் கேள்விக்குறியாகி விடும். அக்டோபரில், உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளதால், சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கோலி தேர்வு செய்ய விரும்புவார். அது யார் என்பதை பார்க்காமல், அவர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்பதையே கோலி கவனிப்பார்.
பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்காது. சுழற்பந்து வீச்சாளர்களின் தேர்வு தான் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் மீண்டும் களமிறங்குவதை பற்றி நான் பொருட்படுத்த மாட்டேன். நான் விராட் கோலியாக இருந்திருந்தால், நிச்சயம் சாஹல் - குல்தீப் ஆகியோருக்கு பதிலாக, அஸ்வின் மற்றும் ஜடேஜாவைத் தான் தேர்வு செய்வேன்.
ஏனென்றால், இருவருக்கும் அதிக அனுபவமுள்ளது. ஆல் ரவுண்டர் திறமையுள்ள இருவருக்கும், போட்டியை மாற்றியமைக்கும் திறனும் உள்ளது. அப்படி இருக்கும் போது, அஸ்வின் - ஜடேஜா ஆகியோரை ஏன் தேர்வு செய்யக் கூடாது?' என பனேசர் கூறியுள்ளார்.