"அவரு ஒழுங்கா ஆடாதனால தான்.. இந்தியா 'டீம்'க்கு ஒரு நல்லது நடந்துச்சு..." என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டாரு??... சுனில் கவாஸ்கர் 'அதிர்ச்சி' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி, 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

இந்த தொடரில், முதல் நான்கு போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய வீரர் கே எல் ராகுல், 0,1,1 மற்றும் 14 ரன்கள் மட்டுமே அடித்து, மிகவும் மோசமான ஃபார்மில் அவர் இருந்தார். இதனால், கடைசி போட்டியில் அவர் களமிறக்கப்படாமல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும், மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அதிரடி காட்டியதால், இந்திய அணி நல்ல ரன் குவித்து, போட்டியில் வெற்றியும் பெற்றது.
இதனால், ரோஹித் - கோலி இணையை பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து, டி 20 போட்டிகளில் இவர்கள் இருவருமே தொடக்க வீரராக ஆட வேண்டுமெனவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), ரோஹித் - கோலியைப் பாராட்டி, அதே வேளையில் வேறொரு வீரரை வெறுப்பேற்றும் வகையிலான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
'டி 20 போட்டியைப் பொறுத்தவரையில், அணியின் சிறந்த பேட்ஸ்மேன், அதிகமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே, விராட் கோலி (Virat Kohli), டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாதது, நல்லதாக போய்விட்டது. அதனால் தான் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக ஆடி அதிக வரவேற்பையும் பெற்றனர்.
சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டில், ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் தான் ஆடினார். அவர் தொடக்க வீரராக இறங்க ஆரம்பித்த பின்னர் தான், அது அவரது கிரிக்கெட் கரியரையே தலைகீழாக மாற்றி விட்டது. இந்திய அணிக்கும் நல்லதாய் அமைந்தது.
எனவே, அதைப் போல கோலியும் தொடக்க வீரராக இறங்கலாம். ரோஹித் - கோலி தொடக்க ஜோடியே இனி இந்திய அணிக்குத் தொடரலாம்' என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
கே எல் ராகுல் பல தொடர்களில், தொடக்க வீரராக களமிறங்கி, சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், ஒரு தொடரை வைத்து அவரை இனிமேல், தொடக்க வீரராக களமிறக்க வேண்டாம் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
