'சூர்யகுமார்' குறித்து 'கோலி' சொன்ன அந்த 'விஷயம்'... "கேப்டனே சொல்லிட்டாரு, இதுக்கு மேல என்னய்யா வேணும்..." வேற லெவலில் குதூகலமான 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை, இந்திய அணி 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி, அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.
இந்த தொடரில், இந்திய அணிக்காக, ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். இதில், இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்தி, அரை சதமும் அடித்து அசத்தியிருந்தனர்.
சீனியர் முதல் இளம் வீரர்கள் வரை இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இளம் வீரர் ஒருவர் உலக கோப்பை தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பற்றி கோலி கருத்து ஒன்றை சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடைசி டி 20 போட்டியில், தொடக்க வீரராக ரோஹித்துடன் கோலி இறங்கி, மிகவும் சிறப்பாக ஆடியிருந்தார். இதனால், இனி வரும் டி 20 போட்டிகளில் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் இந்திய அணி அதிக ரன்களை குவிக்க முடியும் என பலர் கருத்து தெரிவித்தும் வந்தனர். அதே போல கோலியும், கடைசி டி 20 போட்டிக்கு பின்னர், ஐபிஎல் போட்டியில் தான் தொடக்க வீரராக களமிறங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தனது பேட்டிங் ஆர்டர் பற்றி இன்று மேலும் பேசிய விராட் கோலி, 'நான் இதுவரை மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக களமிறங்கி ஆடியுள்ளேன். அதே போல தற்போது, அணியின் தொடக்க வீரராக எனது பங்கு என்ன என்பதை பற்றி நான் புரிந்து கொள்ள வேண்டும். சூர்யகுமார் தொடர்ந்து இது போன்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், நான் எந்த இடத்திலும் களமிறங்கி ஆட தயாராக உள்ளேன்.
டி 20 உலக கோப்பை தொடர் நெருங்கும் போது இதுபற்றி அதிகம் உரையாடி ஒரு முடிவை எடுப்போம். அதே போல் ஐபிஎல் தொடரில், தொடக்க வீரராக களமிறங்கி நான் என்ன செய்கிறேன் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என கோலி தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை கண்டு பிரம்மித்து போயுள்ள கோலி, அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், அவருக்காக தனது பேட்டிங் ஆர்டரையே மாற்றிக் கொள்வேன் என கூறியுள்ளது மட்டுமல்லாமல், டி 20 உலக கோப்பையில் சூர்யகுமார் ஆடுவது பற்றியும் வரும் போட்டிகளில் முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளது ரசிர்கர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடிய போதும், அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அதனை மிகக் கச்சிதமாக பயன்படுத்தி, அனைவரின் பாராட்டையும் அவர் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.