"உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேல??... நல்லா போயிட்டு இருக்குற நேரத்துல இப்டி பண்ணாதீங்க..." 'கோலி' மீது பாய்ந்த 'விமர்சனம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 - 1 என தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்த விதத்தை பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இரண்டாவது போட்டியில் ஆடிய சூர்யகுமார் யாதவை, மூன்றாவது போட்டியில் ஆட வைக்காததை பற்றி, கம்பீர் உள்ளிட்ட சில வீரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து, முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) செய்த தவறு ஒன்று தான், மிகப் பெரும் குழப்பத்திற்கு காரணமானது என கூறியுள்ளார். இதுபற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, 'மூன்றாவது டி 20 போட்டியில், விராட் கோலி ஆடிய விதம் நன்றாக இருந்தது. இதே போன்று ஒரு பேட்டிங்கை தான் அவரிடம் இருந்து அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
முதல் 20 - 25 பந்துகளில் குறைவாக ரன்கள் எடுத்த கோலி, கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் சேர்த்தார். ஆனால், மூன்றாவது இடத்தில் களமிறங்காமல் ஏன் நான்காவது இடத்தில் கோலி களமிறங்கி ஆடினார் என்பது தான் எனக்கு புரியவில்லை. இது தேவையில்லாத செயல் என்றே கருதுகிறேன்.
இரண்டாவது போட்டியில், அறிமுக வீரராக களமிறங்கி அரை சதமடித்த இளம் வீரர் இஷான் கிஷானை, மூன்றாவது போட்டியில், மூன்றாவது இடத்தில் களமிறக்கி வைக்கப்பட்டார். இது நிச்சயம் சரியான முடிவல்ல.
அதே போல, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது போட்டியில், 7 ஆவது இடத்தில் ஆட வைக்கப்பட்டார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் சீக்கிரம் சரி செய்து கொண்டு இந்திய அணி ஆட வேண்டும்' என ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.