"என்னங்க இதெல்லாம்??... இப்டி தான் முடிவு எடுப்பீங்களா??.." 'கோலி' கருத்தால் கடுப்பான 'சேவாக்'... 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.
முன்னதாக, இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில், 337 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக இங்கிலாந்து அணி எட்டிப் பிடித்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக ஆடி வெற்றியை பெற உதவினர். இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் க்ருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.
இதனால், இந்திய அணியின் பவுலிங் துறை கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதே போல, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. இதுகுறித்து, இரண்டாவது போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி (Kohli), ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை மற்றும் நடந்து முடிந்த டி 20 தொடரில் அதிகம் பயன்படுத்தியதால், அவரது பணிச் சுமையை குறைக்க வேண்டித் தான் அவருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய கேப்டனின் கருத்திற்கு முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), விமர்சனம் ஒன்றை முன் வைத்துள்ளார். 'இங்கிலாந்து தொடருக்கு பிறகு, ஐபிஎல் (IPL) தொடர் மட்டுமே உள்ளது. ஆனால், நீங்கள் ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இங்கிலாந்து தொடரை இழக்கத் தயாராகி விட்டீர்கள்.
4 - 5 ஓவர்கள் பந்து வீசுவது என்பது, அவருக்கு சுமையாக இருக்கும் என்றால் அது தவறு. அப்படி பார்க்கும் பட்சத்தில், 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வது என்பது கூட சோர்வு தரும் விஷயம் தான்.
இதனால், அதனுடன் 5 ஓவர்கள் வரை பந்து வீசுவது என்பது, பணிச்சுமையில் மிகப்பெரிய வித்தியாசத்தை தந்து விடாது. அதே போல, ஹர்திக் பாண்டியாவிற்கு பணி அதிகமாகி விட்டது என யார் சொன்னது. அவர் அறுவை சிகிட்சை செய்து கொண்ட பிறகு, அவ்வளவு போட்டிகளில் ஒன்றும் ஆடவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தான் ஆடி வருகிறார். அதிலும், ஒன்றிரண்டு டி 20 போட்டிகளில் தான் அவர் பந்து வீசினார்.
ஐபிஎல் தொடருக்கு முன்பு ஏதேனும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேண்டுமானால், அவர் பந்து வீச அழைக்க வேண்டாம் என கூறியிருக்கலாம்' என சேவாக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.