டி20-க்கு ஒகே.. ஒருநாள் போட்டிக்கெல்லாம் அந்த பையன் சரிபட்டு வரமாட்டாப்ல.. என்ன கம்பீர் இப்படி சொல்லிட்டாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் சரிபட்டு வரமாட்டார் என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்
நடந்து முடிந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பகுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர். அனைத்து பந்துவீச்சாளர்களையும் கவலைப்படாமல் துவம்சம் செய்தார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு
இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் இடம் பிடித்தார். ஆனால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். இதனால் 3-வது போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2-வது ஒருநாள் போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
கௌதம் கம்பீர் கருத்து
இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘வெங்கடேஷ் ஐயருக்கு டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் இன்னும் அவர் பக்குவம் அடையவில்லை. 7 முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை வைத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒருநாள் போட்டியில் சொதப்பல்
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினார் என்றால், அவரை டி20 கிரிக்கெட்டில்தான் விளையாட வைக்க வேண்டும். ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது. ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கியுள்ளனர்.
மிடில் ஆர்டர்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட கருதினால், முதலில் ஐபிஎல் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினால், அவரை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக மட்டுமே களமிறக்க வேண்டும்’ என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.