‘என்னால தாங்கவே முடியல… நாலு வருஷமா இல்லாம திடீர்ன்னு தூக்கிட்டாங்க..!’- இந்திய சுழற்பந்து வீச்சாளரின் மன வேதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வாகவில்லை எனக் கேட்ட போது மிகவும் மனமுடைந்து விட்டதாக பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஒருவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை உடன் டி20 உலகக்கோப்பை நிறைவடைந்தது. கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது அதில் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என மிகவும் மனம் உடைந்ததாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி பட்டியல் வெளியான போது இளம் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சூர்யகுமார் யாதவ் என கடந்த இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பல இளம் வீரர்கள் இடம் பெற்றனர்.
நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த அஸ்வினுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக விடாது ஒவ்வொரு முறையும் இந்திய அணியில் இடம் பெற்று வந்த யுவேந்திர சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி பட்டியலில் டாப் 15 இடங்களுக்குள் கூட சாஹல் இடம் பெறவில்லை.
டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்கும் முன்னர் மிகவும் மனமுடைந்து இருந்ததாகக் கூறுகிறார் சாஹல். மேலும் அவர் கூறுகையில், “நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்திய அணியில் இடம் பெறாமல் நான் இருந்தது இல்லை. ஆனால், உலகக்கோப்பை மாதிரியான பெரும் தொடர் ஒன்றில் நான் இடம் பெறவில்லை. மிகவும் மனம் உடைந்துவிட்டேன். ஒரு 2 அல்லது 3 நாட்களுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால், ஐபிஎல் வருகிறது என்பதை உணர்ந்து எனது பயிற்சியாளர்களை எல்லாம் உடனடியாக சென்று சந்தித்து நிறைய பேசி கற்றுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் கூட நுழைய முடியாமல் வெளியேறியது. தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்த தொடரில் பங்கேற்க சாஹலுக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளதால் அவர் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
