VIDEO: நீங்க அவுட் இல்ல.. இப்படி ‘அவசரப்பட்டு’ வெளியே போய்ட்டீங்களே.. பரபரப்பான போட்டிக்கு நடுவில் நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவுட் என நினைத்து டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் வெளியே சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 135 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயருக்கு (55 ரன்கள்) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஹெட்மெயர் அவுட் என நினைத்து வெளியேறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 17-வது ஓவரை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட ஹெட்மெயர், அதை பவுண்டரிக்கு விளாச முயன்றார்.
— Ves (@Ves84442098) October 13, 2021
ஆனால் பந்து நேராக பவுண்டரில் லைனில் நின்றுகொண்டிருந்த சுப்மன் கில்லிடம் கேட்சானது. உடனே இந்த விக்கெட்டை கொல்கத்தா வீரர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஹெட்மெயரும் அவுட் என நினைத்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மூன்றாம் அம்பயர் சோதனை செய்து பார்த்ததில், அது நோ பால் என தெரியவந்தது. இதனால் டக் அவுட்டில் நின்றுகொண்டிருந்த ஹெட்மெயரை அம்பயர் மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.