இவங்க ரெண்டுபேரோட சண்டைக்கு இதுதான் காரணமா..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 29, 2019 01:30 PM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இடையேயான பிரச்சனை தொடர்பாக அவர்களிடம் பிசிசிஐ பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இதில் லீக் சுற்றுகள் முழுவதும் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்கள், அரையிறுதிப்போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்கள் சொதப்பியது ரசிகர் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கான காரணம், உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் முன்னணி வீரர் ஒருவர் அனுமதியை மீறி 7 வாரங்களாக தனது மனைவியை தங்க வைத்தாக கூறப்படுகிறது.
அந்த வீரர் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா என புகார் வந்ததாகவும், இதுகுறித்து கோலி, ரோஹித் ஷர்மாவிடம் விசாரிக்கும் போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பும் முன்னதாகவே ரோஹித் ஷர்மா தனது மனைவியுடன் தனியாக இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அமெரிக்கா செல்கிறது. இதனால் பிசிசிஐயின் சி.இ.ஓ அமெரிக்கா சென்று இருவரிடமும் இதுகுறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
