'எம் புள்ளய பாக்காம தூங்க முடியல!'.. மூணாறு நிலச்சரிவில் பலியான மகன்கள்.. 40 நாட்களாக தினமும் 'தந்தை செய்யும்' நெஞ்சை உருக்கும் செயல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரள மாநிலம் மூணாறில் உண்டான நிலச்சரிவில் 70 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புக்குழுவினர் இதுவரை 66 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது.
பல நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடிய போதிலும் இன்னும் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட முடியாத சூழலில் உள்ளது. மூணாறு நிலச்சரிவில் பலியான தனது இளைய மகன் நிதிஷ் குமாரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மூத்த மகன் தினேஷ் குமார் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது தந்தை சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த இடத்திற்குச் சென்று மாலை வரை தன் மகனின் உடல் கிடைக்குமா எனத் தேடி வருகிறார்.
கடந்த 40 நாட்களுக்கு மேலாக இப்படித்தான் தினமும் அவர் தேடி வருகிறார். ஜனவரி 2021 வரை தனது மகனை இப்படி தேட உள்ளதாகவும், தனது மகனை இழந்து 41 ஆவது நாளில், கடைபிடிக்கப்படும் வழக்கமான சடங்குகள் எதையும் தான் கடைப்பிடிக்கவில்லை என கூறும் சண்முக நாதன், தன் மகனின் உடலை மீட்டு எடுக்காமல் எப்படி அதை செய்ய முடியும் என்றும் அவனது உடலை மீட்காமல் தன்னால் தூங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள கிராம வங்கியில் காசாளராக இருக்கும் சண்முகநாதனின் மகன்களான தினேஷ்குமார், நிதீஷ் குமார் ஆகியோர் சண்முகநாதனின் சகோதரர் அனந்தா சிவாமின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் வசித்தனர். அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தினேஷ்குமார் இந்த ஆண்டுதான் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும், நிதிஷ்குமார் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் என்பதும், கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி நிதிஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய சண்முகநாதன் நிலச்சரிவில் மொத்தம் 22 குடும்ப உறுப்பினர்கள் தான் இழந்ததாகவும், இதில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்னும் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தினேஷ் குமாரைத் தவிர கஸ்தூரி, பிரியதர்ஷினி ஆகியோரின் சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இறந்தவர்களின் உடலை தேடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்தும் உடல்களை மீட்க முடியவில்லை என தேவிகுளம் துணை கலெக்டர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.