'ஹலோ நான் சிஎம் பேசுறேன் மா'... 'முதலமைச்சரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் கால்'... ஒரே நாளில் அசர வைத்த கிராமத்து பொண்ணு!
முகப்பு > செய்திகள் > இந்தியாநம்மில் பலருக்கு நல்ல சூழ்நிலையில் பல இருந்தும் என்னால் சாதிக்க முடியவில்லை, என்னால் வெற்றி பெற முடியவில்லை எனப் பல காரணங்களைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சாதிப்பதற்குச் சூழ்நிலை முக்கியமல்ல, கடின உழைப்பு இருந்தால் போதும் என நிரூபித்து இருக்கிறார் மாணவி ஒருவர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருபவர் பிரமோத் குமார் சிங். இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். பிழைப்பிற்காகக் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வந்த இவர், பின்பு குடும்பத்துடன் கேரளாவிலேயே தங்கி விட்டார். தற்போது கங்காரபாடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பாயல் குமாரி படிப்பில் சுட்டியாக விளங்கினார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 83 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ தேர்வில் 95 சதவீத மதிப்பெண்களும் பெற்றார். தான் கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த பிரமோத் குமார், மகளை பெரும்பாவூரில் உள்ள மார் தோமா மகளிர் கல்லூரியில் பிஏ தொல்லியல் மற்றும் வரலாறு படித்துவந்தார்.
குடும்பத்தில் நிலவும் கஷ்டத்திலும் தனது தந்தை படிக்க வைப்பதை எண்ணி மகள் பாயல் குமாரி நன்றாகப் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் நடந்து தற்போது அதன் முடிவுகள் வெளிவந்தன. அதில் பாயல் குமாரி மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பீகார் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளியின் மகள் முதலிடம் பிடித்ததை அறிந்த முதல்வர், பினராயி விஜயன் தொலைப்பேசி மூலம் மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பால் சந்தோசத்தின் உச்சிக்கே பாயல் குமாரி சென்று விட்டார். தனது வெற்றி குறித்துப் பேசிய அவர், ''குடும்பத்தில் நிலவிய கஷ்டமான சூழ்நிலையிலும் எனது தந்தை என்னைப் படிக்க வைத்தார். இதனால் கல்லூரியில் கட்டணம் கட்டுவதே பெரிய பிரச்சினையாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் ரூபாய் என்னால் கட்டமுடியாது. ஆனால் பலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
மேலும் சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகப் போவதாகக் கூறியுள்ள பாயல் குமாரி, சூழ்நிலையைக் காரணம் கூறாமல் கடினமாக உழைத்தால் நிச்சம் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக நம் கண்முன்பே நிற்கிறார்.

மற்ற செய்திகள்
