'பிரஷர் குக்கரோட அடிப்பக்கம் நார்மல் இல்ல...' 'பார்த்த உடனே டவுட் ஆயிருக்கு...' - திறந்தா உள்ள 'இது' இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் விமான புலனாய்வு துறை அதிகாரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல், அவ்வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என கேரள மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நேற்று (05.09.2020) கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்துள்ளது.
நேற்று எப்போதும் போல், கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், சவுதி அரேபியாவில் இருந்து வந்த பயணியின் உடைமைகளையும் சோதித்துள்ளனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அந்தப்பயணி, ஒரு காலியான குக்கரை கொண்டு வந்துள்ளார்.
அதிகாரிகள் பிரஷர் குக்கரை திறந்து பார்க்கையில் அதன் அடிப்பகுதி மட்டும் வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளது. மேலும் அதைக் கவனிக்கையில் அதன் கீழ்புறம் பெரிய இடைவெளி இருந்தது தெரியவந்ததுள்ளது.
உடனடியாக சோதனை அதிகாரிகள் குறிப்பிட்ட பயணியை தனியே அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குக்கரின் அடிப்பாகம் போன்று வைக்கப்பட்டிருந்த தகட்டை அகற்றியதில் தங்கக் கட்டி ஒன்று இருந்துள்ளது.
விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டி சுமார் 700 கிராம் எடை உடையது எனவும், அதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.36 லட்சம் என தெரிய வந்ததுள்ளது.
மேலும் விசாரணையில் தங்க கட்டியை கடத்தி வந்த நபர், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த டி.ஹம்சா என்றும், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான புலனாய்வு துறை பி பேட்ச் அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்து, டி.ஹம்சாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.