'எனக்கு அம்மாவ பாக்கணும்'... 'ஏங்கிப்போன பிஞ்சு மனசு'...'ஒர்க் பிரஷரால் தம்பதி எடுத்த முடிவு'... 19 மாத பாச போராட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிகமான வேலைப் பளு காரணமாக மகனை, தாத்தா பாட்டியிடம் தம்பதியர் விட்டுச் சென்ற நிலையில், பாசத்திற்காக ஏங்கிய சிறுவனின் பாச போராட்டம் 19 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தம்பதியர் வேலை நிமித்தமாக மகன் நீராஜோடு கனடாவில் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு திடீரென பணிச் சுமை அதிகரித்த நிலையில், மகன் நீரஜை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2019 ஜனவரியில் மகன் நீராஜை கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டு, தம்பதியர் மட்டும் கனடா சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் விடுமுறைக் காலத்தை நன்றாகத் தாத்தா, பாட்டியுடன் கழித்த சிறுவன் நீராஜுக்கு அடுத்த சில மாதங்களில் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கியுள்ளான். அந்த நேரத்தில் நீராஜின் அம்மா இரண்டாவது முறையாகக் கருவுற்ற நிலையில், அவர்களால் கனடாவிலிருந்து சொன்ன தேதிக்குக் கேரளா வந்து மகனை அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இறுதியாகக் கடந்த ஜூன் மாதம் அவர்கள் இந்தியா வந்து நீராஜை அழைத்துச் செல்ல இருந்த நிலையில் கொரோனா காரணமாக அதுவும் தள்ளிப் போனது. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்த சிறுவன் நீரஜ் ஏங்கித் தவித்துப் போனான்.
இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்குத் தான் இந்தியாவிலிருந்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து சிறுவனின் நிலையை உணர்ந்த அவனது தாத்தா தாமோதரன், நீதிமன்றத்தை நாடினார். அப்போது சிறுவனின் நிலை குறித்து கவுன்சிலிங் மூலம் அறிந்து கொண்ட நீதிபதி, அவனைக் கனடா அழைத்துச் செல்ல அனுமதி அளித்தார். இதையடுத்து சிறுவனின் தாத்தா தாமோதரனின் நண்பரும், கனடா நாட்டின் குடிமகனுமான ராஜேஷ் ரவீந்திரன் என்பவருடன் சிறுவன் நீரஜ் கனடா அழைத்துச் செல்லப்பட்டார்.
19 மாதங்களுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த நீரஜ் தற்போது அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், இதுபோன்ற சிறு வயதில் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களை ஒருபோதும் அன்பிற்காக ஏங்க வைத்து விடாதீர்கள் என தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
