சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ‘சின்ன தல’ மறுபடியும் டீமுக்குள் வர ஒரு வாய்ப்பு இருக்கு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் ஏலத்துக்கு சிஎஸ்கே அணி எடுக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய பிராவோ, அம்பட்டி ராயுடு, தீபக் சஹர் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களால் ‘சின்ன தல’ என அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இவர் நீண்ட ஆண்டுகளாக சென்னை அணிக்காக அவர் விளையாடி உள்ளார்.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே சிஎஸ்கே அணியால் சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே சிஎஸ்கே அணியால் தங்க வைக்கப்பட்டனர். இதனால் சுரேஷ் ரெய்னா ஏலத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி உட்பட எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காதது ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வெற்றி பெற சுரேஷ் ரெய்னா முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக 2014-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 25 பந்துகளில் 87 ரன்கள் (12 பவுண்டரி 6 சிக்சர்கள்) அடித்து மிரள வைத்திருப்பார். அப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்திருந்தாலும், பஞ்சாப் அணிக்கு ஒரு பயத்தை சுரேஷ் ரெய்னா காட்டியிருப்பார். இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சுரேஷ் ரெய்னாவுக்கு உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனக்கு பால்கனி உள்ள அறை கொடுக்கவில்லை என சிஎஸ்கே நிர்வாகத்துடன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன்காரணமாக சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டு இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
ஆனாலும் இன்று ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் நாளை (13.02.2022) நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அவர்களது அடிப்படை விலையில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அப்போது சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
