'சிஎஸ்கே'வில் இருந்து 'ஆர்சிபி'க்கு போன டு பிளஸ்ஸிஸ்.. "அதே நாள்'லயா இப்டி ஒரு விஷயம் நடக்கணும்.." மீண்டும் மனம் உடைந்த சிஎஸ்கே ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாப் டு பிளெஸ்ஸிஸை சிஎஸ்கே எடுக்காமல் போன நிலையில், அவரை பற்றி வெளியான செய்தி ஒன்று, சென்னை ரசிகர்களை மேலும் வருத்தம் அடைய செய்துள்ளது.
ஐபிஎல் ஏலம், தற்போது பெங்களூரில் வைத்து, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என திட்டம் போட்டு தீவிரமாக தயாராகி இருந்தது.
அதனை இன்றைய ஏலத்திலும், சில அணிகள் ஈடுபடுத்தி, வெற்றியும் கண்டு வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தது.
ரசிகர்கள் ஆலோசனை
தோனி மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் வியூகம் எப்படி இருக்கும் என்பது பற்றி, பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது. எப்படிப்பட்ட புதிய வீரர்களை அணியில் எடுப்பார்கள் என்பது பற்றியும், சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் ஆலோசித்து வந்தனர்.
பழைய வீரர்கள்
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களையே, சிஎஸ்கே அணி இதுவரை ஏலத்தில் எடுத்துள்ளது. பிராவோ, உத்தப்பா, அம்பத்தி ராயுடு மற்றும் தீபக் சாஹர் ஆகிய வீரர்களையே மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. கோப்பையைக் கைப்பற்றிய அணி வீரர்களை மீண்டும் சிஎஸ்கே அணி தேர்வு செய்து வருவதால், சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால், அதே வேளையில், இன்னொரு சம்பவம், சிஎஸ்கே ரசிகர்களை அதிகம் வருத்தம் அடையச் செய்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த தென்னாப்பிரிக்க வீரர் பாப் டு பிளஸ்ஸிஸ், கடந்த முறை, 633 ரன்கள் எடுத்து, அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இதனால், அவரை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடும் வேதனை
ஆனால், அவரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், சிஎஸ்கே அணி வெளியேற்றியது. தொடர்ந்து, இன்று நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில், அவரை சிஎஸ்கே எடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மற்ற பழைய வீரர்களை எடுத்த சிஎஸ்கே, டு பிளஸ்ஸிஸை எடுக்காமல் போனது, ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை உருவாக்கியது.
பாப் டு பிளஸ்ஸிஸ்
தொகை ஏற ஏற, டுபிளஸ்ஸிஸை எடுக்காமல், சென்னை அணி பின் வாங்கிய நிலையில், பெங்களூர் அணி, அவரை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் சற்று மனமுடைந்து போயினர். இந்நிலையில், டுபிளஸ்ஸிஸ் குறித்த மேலும் ஒரு தகவல், சென்னை ரசிகர்களை மீண்டும் மனம் வருந்தச் செய்துள்ளது.
அதிரடி சதம்
இந்தியாவில், ஐபிஎல் தொடர் நடைபெறுவது போலவே, பங்களாதேஷ் நாட்டில், தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதில், Comilla Victorians என்ற அணிக்காக டுபிளஸ்ஸிஸ் ஆடி வருகிறார். தொடர்ந்து, Comilla Victorians மற்றும் Khulna Tigers அணிகள், இன்று மோதிக் கொண்டன.
இதில், முதலில் பேட்டிங் செய்த Comilla Victorians அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டுபிளஸ்ஸிஸ் 54 பந்துகளில், 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.
கருத்து
சிஎஸ்கே அணியில் இருந்து விலகி, பெங்களுர் அணிக்கு சென்ற மறுகணமே இப்படி நடந்துள்ளது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. மற்ற வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது போல, டு பிளஸ்ஸிஸையும், சிஎஸ்கே தக்க வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.