‘உலக சாம்பியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... '85 ரன்னில் சுருண்ட பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 24, 2019 06:38 PM

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

England bowled out for 85 vs Ireland test match

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகளும், பெருமைகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு, அயர்லாந்து மிகப் பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அயர்லாந்துடன் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணியில் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

பர்ன்ஸ், ராய், ரூட், டென்லி, பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், பிராட், லீச், ஸ்டோன் ஆகிய லெவனுடன் களமிறங்கியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமையன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் இருவரையும் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மர்தாஹ் அவுட்டாக்கினார். அடுத்த வந்த கேப்டன் ஜோ ரூட், ஜோ டென்லியை  மார்க் அடேர் வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் அந்த அணிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஜானி பேரிஸ்டோவ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் மூன்று பேரும் தொடர்ச்சியாக டக் அவுட்டாக்கி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தனர். இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்ததால் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றது. அதே மைதானத்தில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணி 85 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.