MS தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகேந்திர சிங் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் மகேந்திர சிங் தோனி. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இதனை விசாரித்துவந்த ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் மகேந்திர சிங் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மகேந்திர சிங் தோனி 2014 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் விதமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார் தோனி. மேலும், ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் ஆகவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் அடிப்படையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார் தோனி. அதனுடன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் அனுமதியை பெற்ற பிறகே இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் தோனி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வில் இன்று நடைபெற்றது. வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read | "இத சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.!".. சோசியல் மீடியா தகவலால் விபரீதம்.. இளைஞர் மரணம்.!

மற்ற செய்திகள்
