முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான மஹேந்திர சிங் தோனி, மூட்டு வலி காரணமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு மூட்டு வலி ஏற்பட்டதாகவும் அதனால் உள்ளூர் ஆயுர்வேத வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மூட்டு வலி
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோனி, அம்மாநிலத்தின் ராஞ்சியில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது. இரண்டு மூட்டுகளிலும் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் ஆயுர்வேத வைத்தியரான வந்தன் சிங் என்பவரிடம் தோனி சிகிச்சை பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
மூலிகை மருந்துகளை பாலுடன் கலந்து கொடுக்கும் சிங், 40 ரூபாய் மட்டுமே மருத்துவ கட்டணமாக வசூலிக்கிறார். இதனால் உள்ளூரில் பலரும் இவரை நாடி செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோனியின் பெற்றோர் இந்த வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றதாகவும், அதனால் அவர்கள் குணமடையவே தோனியும் இவரிடம் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
சிகிச்சை
சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய சிங், தனக்கு தோனியை அடையாளம் தெரியவில்லை என்றும் உள்ளூர் மக்கள் அவரை ஆர்வத்துடன் காண ஓடிவந்ததை பார்த்த பிறகு தான் அவர் யார் என தெரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு தோனி ஒரு டோஸ் மருந்தை உட்கொண்டதாகவும், அடுத்த டோஸைப் பெறுவதற்கான நேரம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் தோனி தரப்பில் இருந்து இதுவரையில் இதுகுறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!