"தோனி அனுப்பிய மெசேஜ் இதுதான்"..பலநாள் ரகசியத்தை உடைத்த விராட் கோலி.. உருகும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தல தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ஒரு சரிவு இருக்கத்தான் செய்தது. 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு பிறகு பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினார் கோலி. அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது செய்தியாளர்களை சந்தித்திருந்த விராட் கோலி,"நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, ஒருவரிடமிருந்து ஒரு செய்தி மட்டுமே வந்தது. கடந்த காலத்தில் அவருடன் விளையாடியிருக்கிறேன். அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை" என வெளிப்படையாக பேசியிருந்தார்.
மேலும், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது. இருப்பினும், அதில் இருந்து வெளிவந்து மீண்டும் இந்த உலகத்திற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் கோலி. நடப்பு T20 உலகக்கோப்பை தொடரில் 3 அரை சதங்களை விளாசி ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 246 ரன்கள் எடுத்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தனக்கு அனுப்பிய மெசேஜ் குறித்து மனம் திறந்திருக்கிறார் கோலி. இதுபற்றி அவர் பேசுகையில்,"என்னை உண்மையாக அணுகிய ஒரே நபர் தோனி மட்டுமே. என்னைப் பொறுத்தவரை, என்னைவிட மூத்த ஒருவருடன் இவ்வளவு வலுவான பிணைப்பையும் உறவையும் நான் கொண்டிருக்க முடியும் என்பது ஒரு ஆசீர்வாதம். இது பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நட்பைப் போன்றது. மேலும் அதே செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று, 'நீங்கள் வலிமையானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்போது, வலிமையான நபராக நீங்கள் இருக்கும்பட்சத்தில், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மக்கள் மறந்துவிடுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
"எனக்கு அந்த செய்தி ஒரு திறப்பாக இருந்தது. நான் எப்போதுமே மிகவும் தன்னம்பிக்கை உள்ளவன், மிகவும் மன வலிமை உள்ளவன், எந்தச் சூழலையும், சூழ்நிலையையும் தாங்கிக் கொண்டு, ஒரு வழியைக் கண்டுபிடித்து, வழி காட்டுபவனாகவே பார்க்கப்பட்டிருக்கிறேன். வாழ்வில் சில நேரங்களில் நீங்கள் இரண்டு அடி பின்வாங்கி என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்" என்றார்.