தளபதி கம்பீர் VS தல தோனி.. ஐபிஎல் மெகா ஏலம்.. மல்லுக்கட்ட போகும் பெரிய தலைகள்??.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் போட்டி, இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கான மெகா ஏலம், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

கடந்த ஐபிஎல் தொடரில், 8 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து அணிகளும், இரண்டு முதல் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களை, நடைபெறவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்கான இறுதி பட்டியலில் 590 வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஷிகர் தவான், டேவிட் வார்னர், முகமது ஷமி, அஸ்வின், ரபாடா உள்ளிட்ட வீரர்களுக்கு ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் கடந்த ஆண்டை விட, புத்தம் புது பொலிவாக ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு தோன்றும் என்பதால், தங்களின் ஃபேவரைட் அணி எப்படிப்பட்ட வீரர்களைத் தேர்வு செய்யும் என்பதைக் காணும் எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் ஏலத்தில் தோனி?
ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு, அனைத்து அணிகளும் தற்போதே தீவிரமாக திட்டம் போட்டு தயாராகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ஏலத்திற்கான திட்டம் வகுத்து வருவதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல், ஐபிஎல் ஏலத்தில் தோனி கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குறி வைக்கும் சிஎஸ்கே
பொதுவாக, ஐபிஎல் அணியின் கேப்டன், ஏலத்தில் பங்கேற்காமல் இருக்கும் நிலையில், வருங்கால சிஎஸ்கே அணியினை தயார் செய்வதற்கு வேண்டி, தோனி இப்படி தீவிரமாக இறங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. மெகா ஏலம் என்பதால், நிச்சயம் அதிக இளம் வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைக்கலாம் என்றும் தெரிகிறது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதனிடையே, தற்போது மற்றொரு முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, கே எல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், அந்த அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீரையும் தேர்வு செய்துள்ளது.
வல்லவரான கம்பீர்
தற்போது, கம்பீர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுதாக தான் தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட கம்பீர், மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி, இரண்டு முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தார். அது மட்டுமில்லாமல், அணியில் இளம் வீரர்களை சிறப்பான முறையில் வழி நடத்தி, அவர்களை தேர்ந்த வீரர்களாக மாற்றுவதில் கம்பீர் வல்லவர்.
தோனி Vs கம்பீர்
ஒரு பக்கம், எதிர்கால சிஎஸ்கே அணியை கருத்தில் கொண்டு, தோனியே ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படும் நிலையில், மறுபக்கம் தோனியை போன்று மனநிலையுடன் கூடிய கவுதம் கம்பீரும், புதிய ஐபிஎல் அணியை மேம்படுத்தும் நோக்கில் களமிறங்குவதால், ஐபிஎல் மெகா ஏலம் நிச்சயம் சூடு பிடிக்கும் என்றே கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
