"இது எல்லாம் ஒரு பிட்ச்சா??... இங்க நான் கூட அசால்ட்டா 'விக்கெட்' எடுப்பேன்..." கடுமையாக சாடிய முன்னாள் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2 - 1 என இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இரண்டு நாளுக்குள்ளே இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். இந்த போட்டியில், மொத்தம் விழுந்த 30 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்கள் எடுத்தவை. இரண்டு நாட்களில் இந்த போட்டி முடிவடைந்ததால், கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள், பிட்ச் மீது எக்கச்சக்க புகார்களையும் அளித்து வருகின்றனர்.
அப்படி ஒரு கருத்தை தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேவிட் லாயிட் (David Lloyd) தெரிவித்துள்ளார். 'அகமதாபாத் பிட்ச், சென்னை பிட்ச்சை விட மோசமானதாகும். ஐசிசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டி இப்படியா நடைபெற வேண்டும்?. இரண்டாம் நாள் பாதியிலேயே போட்டி முடிந்து போனது. இதற்கு எல்லாம், ஐசிசி தலைமையில் இருந்து பதில் வர வேண்டும்.
பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் எல்லாம் வெறும் 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுக்கிறார். இதே போல, கடந்த காலத்தில், ஆஸ்திரேலிய பார்ட் டைம் ஸ்பின்னரான ஆலன் பார்டர் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பார்ட் டைம் பவுலர்களுக்கே விக்கெட்டுகள் கிடைக்கிறது என்றால், ஏதோ தவறாக இருக்கிறது என்றும் அர்த்தம். இந்த பிட்ச்சில் நான் பந்து வீசியிருந்தால் கூட விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன்' என டேவிட் லாயிட் கடுமையாக சாடியுள்ளார்.