"பல வருஷமா 'கிரிக்கெட்'ன்னு ஓடிட்டு இருந்தேன்... இப்போ அதுல இருந்து 'ரெஸ்ட்' எடுத்துக்கப் போறேன்..." 'இந்திய' வீரரின் அறிவிப்பால்... உருகிய 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம், டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன வினய் குமார், அதன் பிறகு ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். 31 ஒரு நாள் போட்டிகளில் 38 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள வினய் குமார் 1 டெஸ்ட் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், ஓய்வு குறித்த அறிக்கை ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வினய் குமார் பதிவிட்டுள்ளார். அதில், 'தாவனகரே எக்ஸ்பிரஸ் (Davangere Express), 25 ஆண்டுகளாக கிரிக்கெட் வாழ்க்கையில் பல நிலையங்களைக் கடந்து, தற்போது 'ஓய்வு' என்ற நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது. மேலும், நிறைய உணர்ச்சிகளுடன் சர்வதேச மற்றும் முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன்.
எனது நாட்டிற்காக ஆடியதால் மிகப்பெரும் அதிர்ஷ்டசாலியாகவே என்னை கருதுகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தில், வாழ்நாள் இறுதி வரை என்னை மகிழ்விக்கக் கூடிய பல தருணங்கள் நடந்துள்ளது.
இது ஒரு எளிதான முடிவல்ல. இருப்பினும், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் இப்படி ஒரு நாள் வந்தே தீரும்' என கூறியுள்ளார். மேலும், 'அணில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி, வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுடன் ஆடியதால் தான் எனது கிரிக்கெட் அனுபவம் அதிகம் செழுமையடைந்தது. அது மட்டுமில்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணியில், சச்சின் டெண்டுல்கர், எனக்கு வழிகாட்டியாக கிடைத்தது நான் செய்த பாக்கியம்' என உருக்கமடைந்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், தனக்கு வாய்ப்பளித்த கர்நாடக கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், தனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் வினய் குமார் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கிரிக்கெட்டுக்காக இயங்கிக் கொண்டிருப்பேன் என்றும் வினய் குமார் குறிப்பிட்டுள்ளார்.
Thankyou all for your love and support throughout my career. Today I hang up my boots. 🙏🙏❤️ #ProudIndian pic.twitter.com/ht0THqWTdP
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) February 26, 2021
அணில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் அவரது கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல, ரசிகர்கள் பலரும் அவரது பதிவின் கீழ் உருக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.