‘தொடரும் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள்’... '34 வீரர்களுக்கு நோட்டீஸ்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 24, 2019 07:24 PM
கர்நாடக பிரிமியர் லீக் போட்டிகளின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அணியின் உரிமையாளர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பிரிமியர் லீகில் பெலகாவி பேந்தர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அணிகள் உள்ளன. உள்ளூர் போட்டியான ஐபிஎல் போன்று பல மாநிலங்களில், டி20 போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் கே.பி.எல். பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது. அப்போது, பெலகாவி பேந்தர் அணி பங்கேற்கும் போட்டிகளின் போது, விதிகளுக்கு மாறாக பிற அணிகளின் வீரர்களுடனும், சூதாட்டத் தரகர்களுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த அணியின் உரிமையாளர் அலி அஸ்பக் தாரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் துபாய் சார்ந்த சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக மத்திய கிரைம் பிரான்ச் போலீசார் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் அலி அஸ்பக் தாராவின் தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், பல்வேறு அணிகளைச் சேர்ந்த 34 வீரர்களுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில், வாட்ஸ் அப் மூலம் சூதாட்டப் புரோக்கர்கள் வீரர்களை அணுகியதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. இந்நிலையில் கர்நாடகாவிலும் சூதாட்டப் புகார் எழுந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.