"ஏழைகளின் வீட்டுக்குச் சென்று இலவச மருத்துவம்!"... "வீடு தேடி வந்த பத்மஸ்ரீ விருது!!"... "அஸ்ஸாம் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சும் தமிழக டாக்டர் யார்?"
முகப்பு > செய்திகள் > கதைகள்அஸ்ஸாம் மாநிலத்தில், 13 வருடங்களாக ஏழை நோயாளிகளின் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் ரவி கண்ணனுக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலம் சில்ச்சரில் உள்ள கேச்சர் புற்றுநோய் மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றுள்ளார், டாக்டர் ரவி கண்ணன். அந்த தருணம் தான், அஸ்ஸாம் மாநிலம் குறித்த தன்னுடைய அபிப்ராயத்தை மாற்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், தென் இந்தியாவை விட, சில்ச்சரில் இருக்கும் மக்களுக்கு, மருத்துவ தேவைகள் அதிகம் இருப்பதைத் தான் உணர்ந்ததாகப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதால், அவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்குவதன் மூலம், அதிக அளவிலான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருவார்கள் என்று, தான் யூகித்ததாக கூறியுள்ளார்.
புற்று நோய்க்கு சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகளுடன், குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் வர வேண்டும். ஆனால், அவர் தினக்கூலிகளாக இருப்பதால், பெரும்பாலான ஏழை நோயாளிகள் வருமானத்தை கருத்தில் கொண்டு, சிகிச்சைக்கு வரமால் இருப்பதை டாக்டர் ரவி கண்ணன் கண்டறிந்துள்ளார்.
அந்த தடையை உடைத்தெறியும் பொருட்டு, ஏழை நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினருக்கும் மருத்துவமனையிலேயே பணி வழங்குவதன் மூலம், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளார், டாக்டர் ரவி கண்ணன்.
இத்தனை வசதிகளை செய்த பின்பும், புற்றுநோய் சிகிச்சைக்கு தொடர்ந்து வர இயலாத நோயாளிகளுக்கு, அவர்களின் வீட்டுக்குச் சென்று இலவசமாக மருத்துவம் பார்க்கும் முறையை அமல்படுத்தியுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இல்லாத ஏழை நோயாளிகளின் மீதான அக்கறையும், சலிப்பற்ற பொது சேவையும் தான், டாக்டர் ரவி கண்ணனை பத்மஸ்ரீ விருது வாங்கும் உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
