கோடிகளில் பணம்... சொகுசு வாழ்க்கை... கிளினிக்கில் நடந்த சோதனையில்... வெளியான அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jan 01, 2020 11:20 AM
மருத்துவமே படிக்காமல், 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து, போலி மருத்துவர் ஒருவர் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் சேட்டு (36). மருந்தாளுனருக்கான பி.பார்ம் படித்த இவர், சோழம்பட்டு கிராமத்தில் அருண் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்துக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் தன்னை மருத்துவர் போலவே காட்டிக் கொண்டு வந்த அவர், மருந்துக் கடை அருகிலேயே கடந்த 15 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் வரத் தொடங்கியதும், மூரார்பாளையம், செல்லியம்பாளையம் ஆகிய இடங்களிலும் மருந்துக் கடையின் கிளைகளை வைத்து அருகிலேயே கிளினிக் நடத்தியுள்ளார். அந்த கிளினிக்கில் ஆங்கில மருத்துவம், கருத்தரிப்பு மற்றும் கருக்கலைப்பு போன்ற செயல்களில் போலி மருந்துகள் மூலம் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சைக்கு வருபவர்களிடம் பல ஆயிரங்களில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் சேர்த்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில், விழுப்புரம் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையில் சுகாதாரத் துறையினர் மற்றும் சங்கராபுரம் போலீசார் சோழம்பட்டில் உள்ள சேட்டுவின் மருந்து கடையில் நேற்று மதியம் திடீர் சோதனை மேற்கொண்டனர். நோயாளிகள் போலவே வந்த அதிகாரிகள், சோதனைக்கு வந்துள்ளார்கள் என்று தெரிந்ததும், போலி மருத்துவம் பார்த்த சேட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், சேட்டுவின் மெடிக்கல்ஸ் மற்றும் கிளினிக்கில் இருந்து ஏராளமான மருந்து மாத்திரைகள், கருக்கலைப்பு சாதனங்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலியாக செயல்பட்ட கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான போலி மருத்துவர் சேட்டுவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
