'சூப்பரா செட்டில் ஆகலாம்'...'பிளான் போட்ட காதல் ஜோடி'... எங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டாங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 16, 2019 12:09 PM

மோசடி ஆசாமிகள் தங்களின் வித்தியாசமான செயல் திட்டங்கள் மூலம் பல அப்பாவிகளின் வாழ்க்கையை எளிதாக சீரழிகிறார்கள். அது போன்று காதல் ஜோடி சேர்ந்து பல இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்ததோடு அவர்களின் பணத்தையும் சுருட்டிய சம்பவம் பலரையும் அதிரச் செய்துள்ளது.

Young couple cheated 54 people on providing job in British Airways

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே சிரவாடா பகுதியைச் சேர்ந்தவர் மார்வின். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்வாரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதன் மூலம் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக விளம்பரம் செய்தார். விமானி, விமான பணிப்பெண் உள்பட பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் அறிவித்தார். இதற்காக தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக பல விளம்பரங்களை கொடுத்தார்.

மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு 2 மாத பயிற்சி அளிக்க உள்ளதாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணமாக ஒவ்வொருவரும் தலா ரூ.1½ லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து எப்படியாவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலை வாங்க வேண்டும் என்ற ஆசையில் உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பலர் மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களுடைய பெயர்களை முன்பதிவு செய்தனர்.

அதோடு தலா ரூ.1½ லட்சம் கட்டணத்தையும் செலுத்தினர். இதற்கிடையே விளம்பரத்தை கண்ட ஹாசன், பெலகாவி, கோவா, உப்பள்ளி, பெங்களூரு பகுதியை சேர்ந்த மொத்தம் 54 பேர் மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சேர்ந்தனர். இதையடுத்து பயிற்சியானது ஆரம்பிக்க இருப்பதாக கூறி பயிற்சிக்கு சேர்ந்த 54 பேரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அங்கு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து 54 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று வந்த சாரா கான் என்பவர், 54 பேருக்கும் பயிற்சி அளித்தார்.

பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் உணவு, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை, சீருடை உள்பட அனைத்தும் வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளில் 54 பேரையும் சந்தித்த மார்வின், அவர்களின் விருப்பப்படி விமான நிலைய அலுவல், விமான பணிப்பெண் உள்ளிட்ட பதவிகளில் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரிட்டீஷ் விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்று, பணி நியமன ஆணைகளை கொடுத்து பணிக்கு சேர்ந்து கொள்ளலாம் என கூறிவிட்டு மார்வினும், சாரா கானும் சென்றுவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து 54 பேரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்திற்கு சீருடையுடன் வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணி நியமன ஆணைகளை கொடுத்து தாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் குழப்பம் அடைந்த அதிகாரிகள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் விசாரித்தார்கள். அப்போது தான் 54 பேரும் ஏமாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பெங்களூரு மடிவாளா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், மார்வினும், அவருடைய காதலியான அங்கீதா ராய்கரும் சேர்ந்து 54 பேரையும் ஏமாற்றி ரூ.81 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் மார்வினின் காதலியான அங்கீதா ராய்கர் தான், சாரா கான் என்ற பெயரில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என கூறி 54 பேருக்கும் பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற ஆசையில் இவர்களை நம்பி வந்தோம். ஆனால் இப்போது வேலையும் இல்லாமல் பணத்தையும் இழந்து எங்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிவிட்டது என பாதிக்கப்பட்ட  54 பேரும் வேதனையுடன் கூறினார்கள். மோசடி செய்த காதல் ஜோடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

Tags : #FLIGHT #BENGALURU #BRITISH AIRWAYS #YOUNG COUPLE #ANKITA RAIKAR