'பெங்களூருக்கு போறேன்னு சொன்னாரு'... சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 22, 2019 12:02 PM

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Missing Chennai Software Engineer Syed Tanveer Ahmed brutally killed

அயர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் சையத் தன்வீர் அகமத். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த இவர் கல்லுரியில் படிக்கும் போது மதுரையைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுரையை சேர்ந்த இவர் பெங்களூரு ராஜாஜி நகரில் வளர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சையத் தன்வீர் அகமத்-ஷில்பாவின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும், மகிழ்ச்சியாக தங்களின் திருமண வாழ்வை தொடங்கினார்கள். அயர்லாந்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்வீர் என்ஜினீயராக பணியாற்றி வந்ததால், ஷில்பாவும் கணவருடன் தங்கி வேலை செய்து வந்தார். இதனிடையே ஷில்பா கர்பமடைந்ததால் அவரை பிரசவத்திற்கு தாய் வீட்டில் விடுவதற்காக மனைவியுடன், ஷில்பாவின் தாயார் வசித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு வந்தார். அங்கு மனைவியுடன் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்த அகமத், கடந்த 12-ந் தேதி காலை பெங்களூருவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து பெங்களூரு மடிவாளா பகுதியில் இருப்பதாக மனைவிக்கு செல்போனில் 'மெசேஜ்' அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தான் ஓசூர் வந்து விட்டதாக அன்று மாலை 4 மணி அளவில் மனைவிக்கு ‘மெசேஜ்’ அனுப்பியுள்ளார். அதன் பின்பு அகமதுவிடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இதனால் அவரது மனைவி ஷில்பா அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

ஒருவேளை செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருந்திருக்கும் என ஷில்பா  எண்ணினார். ஆனால் அன்று முழுதும் அகமது வீட்டிற்கு வராததால் பதறிப்போன அவர் 13-ந் தேதி ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஷில்பா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல்  கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தான் அது காணாமல் போன சையத் தன்வீர் அகமத் என தெரியவந்தது. தலையின் பின்பகுதி பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர் காதல் திருமணம் செய்ததால் ஏற்கனேவே அவருடைய குடும்பத்துடன் அவருக்கு பிரச்னை இருந்தது தெரியவந்தது.

மேலும் பெங்களூருவில் சையத் தன்வீர் அகமத் ரூ.1½ கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் சில சொத்துக்களை வாங்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ள காவல்துறையினர்,  சையத் தன்வீர் அகமதை கொலை செய்த மர்மநபர்களை  தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : #MURDER #BENGALURU #SOFTWARE ENGINEER #CHENNAI #SYED TANVEER AHMED #KILLED