'மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு இதான் சாப்பாடா'?... 'பந்தியில் வந்த சண்டை'.... புதுமாப்பிள்ளையால் மச்சானுக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற தகராறில், மணப்பெண்ணின் சகோதரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே ஃபரூக்காபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நடைபெற்ற பந்தியில் சாப்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளையே மணமகளின் தம்பியைக் கொலை செய்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் அண்ணன் புனித் என்ற இளைஞர் நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதில், ''இரவு 8:30 மணிக்கு மணமகன் வந்தார். அதன்பிறகு சடங்குகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் பரிமாறப்பட்ட உணவு குறித்து புகார் தெரிவித்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டிற்கு இப்படி தான் உணவு கொடுப்பீர்களா அதிருப்தி தெரிவித்தனர். அப்போது வீட்டின் பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போது, அவர்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியால் என் தாய் மாமா ராம் குமாரை நோக்கிச் சுட்டனர். அந்த நேரம் பந்தியில் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த எனது தம்பி பிரன்ஷுவை, மாப்பிள்ளை மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரில் இழுத்து போட்டுக்கொண்டு வேகமாகச் சென்றார்கள்.
அவர்கள் காரில் தப்பி ஓடும்போது 3 பெண்கள் மீது கார் மோதியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.இதனிடையே அதிகாலை 3 மணியளவில், எனது சகோதரனின் உடலைக் கிராமத்தில் போட்டுவிட்டு அவர்கள் தப்பி விட்டார்கள். அவனது கழுத்தில் நெறிக்கப்பட்ட வடு இருந்தது. முகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.” எனத் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட மணமகனையும், அவரது உறவினர்களையும் போலீசார் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே மணமகளின் தம்பியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு தான் சிறுவன் எப்படி கொலை செய்யப்பட்டான் என்பது தெளிவாகத் தெரியும் என, போலீசார் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
