‘அது எப்படிங்க?’.. ‘மொத்த வாக்காளர்களே 90 பேர்தான்.. ஆனா பதிவான ஓட்டு 171’.. அசாம் தேர்தலில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசாம் வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட ஓட்டு அதிகமாக இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடந்தது. இதில் திமா ஹாசோ (Dima Hasao) தொகுதிக்குட்பட்ட ஹப்லாங் (Haflong) வாங்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹப்லாங் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த கிராமத் தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலைக் கொடுத்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர்களும் இதை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 90 வாக்காளர்களே உள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததை அடுத்து, அங்கு தேர்தல் பணியில் இருந்த 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்டத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.