கடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இன்னும் எந்த உலக நாடுகளும் கொரோனாவுக்கு தடுப்பு ஊசியையோ, மருந்தையோ கண்டுபிடிக்கவில்லை என்பதால் தற்போதைக்கு சமூக இடைவெளி, தனிமைப்படுத்தி கொள்ளுதல், மற்றும் ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு கண்கண்ட மருந்தாக உள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் தெருக்களை சுத்தப்படுத்தும் தண்ணீரில் கொரோனா வைரஸ் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அந்நாட்டில் உள்ள பாரீஸ் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர், வீதிகளை சுத்தம் செய்வதற்கும், நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நீர் அலங்கார நீர் ஊற்றுகளுக்கும் வழங்கப்படுகிறது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த நீர் வழங்கப்படுவது இல்லை. அதே நேரம் அந்த நீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் மக்களுக்கு அளிக்கப்படும் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவதால், அவற்றில் எந்த ஆபத்தும் இல்லை என பாரீஸ் சுற்றுச்சூழல் உயர் அதிகாரி செலியா பிளேவல் தெரிவித்து இருக்கிறார்.
பாரிஸ் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் சிறிய அளவிலான வைரஸைக் கண்டறிந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு முடக்கி விடப்பட்டுள்ளன. மேலும் பாரிஸ் நகரம் தொடர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பதை தீர்மானிக்கும் முன் இதுகுறித்து பிராந்திய சுகாதார நிறுவனத்திடம் ஆலோசனை நடத்தி வருவதாக பிளேவல் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனாவால் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் பிரான்ஸ் நாட்டில் இறந்துள்ளனர். உலகளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த 4-வது நாடாக பிரான்ஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
