போலீஸ் உடையில் வந்த 'மர்ம' நபரால் நிகழ்ந்த... '30 ஆண்டுகளில்' இல்லாத 'பயங்கரம்'... நாட்டையே 'உலுக்கியுள்ள' சம்பவம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் உடையணிந்து வாகனம் ஒன்றில் சுற்றிய அந்த நபரால் பலருடைய வீடுகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஹெய்தி ஸ்டீவன்சன் எனும் 23 வயது பெண் போலீசார் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்து அந்த நபரைத் தீவிரமாகத் தேடிவந்த போலீசார் நகரின் என்பீல்டு என்னும் இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அவரைக் கண்டறிந்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அவருடைய பெயர் கேப்ரியல் வார்ட்மேன் (51) என்பதும், அவரும் இதில் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு அவர் பல வீடுகளுக்கு தீயும் வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார். இது அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான தாக்குதல் ஆகும். போர்ட்டாபிக் என்னும் சிறிய ஊரிலும், தாக்குதல் நடந்த மற்ற இடங்களிலும் வீடுகளுக்கு வெளியேயும் உள்ளேயும் உடலகள் சிதறிக் கிடந்துள்ளன.
இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், "கனடா வரலாற்றிலேயே இது ஒரு மோசமான வன்முறைச் செயல்" என வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் பற்றி பேசியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு, "ஒரு நாடாக இது போன்ற தருணங்களில் நாம் ஒன்றாக, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம். இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்போம். அவர்களுக்கு உதவுவோம்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 1989ஆம் ஆண்டு நடந்த இதுபோன்ற ஒரு துப்பாக்கிச்சூட்டில் 14 பெண்கள் உயிரிழந்ததையடுத்து அங்கு துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. அத்துடன் அங்கு பதிவு செய்யாமல் துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.
