'என்ன இவருக்கு கொரோனா இல்லயா!?'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்!.. பதறவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 20, 2020 05:01 PM

கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்த இருவருக்கு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்தது. இருவருக்கும் ஒரே பெயர் இருந்த நிலையில், குழப்பத்தால் தொற்று இருப்பவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

andhra hospital discharged a patient with covid19 by mistake

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக் கல்லூரியில் சிலர் கொரோனா மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். இங்கு ஒரே பெயரில் இருவர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், பெயர் குழப்பத்தால் மற்றொருவரை டிஸ்சார்ஜ் செய்வதற்குப் பதில், தொற்று உள்ளவரை மருத்துவக் குழுவினர் டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.

மேலும், அரசு அறிவித்தபடி, அவருக்கு ரூ.2000 பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அதன் பின்னர், நடந்த தவறை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, தாடேபல்லியில் இருந்த கொரோனா தொற்று நபரை அவரது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை கூறி, மீண்டும் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், அந்த நபர் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என அடம் பிடித்தார்.

அதன் பின்னர், நடந்த விவரங்களை போலீஸாருக்கு தெரிவித்த மருத்துவர்கள், போலீஸாரின் உதவியோடு தொற்று நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி தற்போது என்.ஆர்.ஐ மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். இதனால், தொற்று இருப்பவரின் வீட்டில் உள்ள மேலும் 4 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பெரும் குழப்பத்தால், தொற்று உள்ள நபரிடம் அந்த ஒரு நாள் யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுவினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குண்டூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.