பெற்றோரிடம் ஷ்ரத்தா பேசிய கடைசி வார்த்தைகள்.. நாட்டையே உலுக்கிய கோரம்.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கியுள்ள ஷ்ரத்தா கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மும்பையில் உள்ள தனியார் கால்சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார் 26 வயதான ஷ்ரத்தா எனும் இளம்பெண். அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் அஃப்தாப் அமீன் பூனாவாலா. நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில் நாளடைவில் இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, மே மாத துவக்கத்தில் காதலனுடன் டெல்லிக்கு குடியேறிய ஷ்ரத்தா அமீனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறும் முன் தனது பெற்றோரிடம் ஷ்ரத்தா,"எனக்கு 25 வயதாகிறது. எனது சொந்த முடிவுகளை எடுக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. நான் அப்தாப் பூனாவாலாவுடன் லிவிங் டுகெதரில் இருக்க விரும்புகிறேன். அதனால், இன்று முதல் நான் உங்கள் மகள் இல்லை என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்" எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஃப்தாப் உடன் வசித்து வந்த நிலையில் தனது தந்தை விகாஸ் மதனுடன் அவ்வப்போது பேசி வந்திருக்கிறார் ஷ்ரத்தா. இதனிடையே, ஷ்ரத்தாவிடம் இருந்து போன்கால் வராததால் சந்தேகமடைந்த விகாஸ் டெல்லிக்கு சென்றிருக்கிறார். கடந்த 8 ஆம் தேதி ஷ்ரத்தா வசித்து வந்ததாக சொல்லப்படும் வீட்டிற்கு சென்ற விகாஸ் வீடு பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மெஹ்ரவ்லி பகுதி காவல் நிலையத்தில் அமீன் தனது மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அமீனை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையின் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ்," அஃப்தாப் உடன் ஷ்ரத்தா பழகிவருவது 18 மாதங்களுக்கு பிறகே எங்களுக்கு தெரியவந்தது. 2019 ஆம் ஆண்டில் இதுகுறித்து ஷ்ரத்தாவை நாங்கள் கண்டித்தோம். ஆனால் அவளது மனம் மாறவில்லை. ‘எனக்கு 25 வயதாகிவிட்டது. என் வாழ்வை நானே முடிவு செய்வேன்' என்று கூறிவிட்டு அஃப்தாபுடன் சென்றுவிட்டாள். இந்த கவலையில் ஆழ்ந்திருந்த எனது மனைவி கடந்த ஆண்டு மரணமடைந்தார். அதன்பின்னர் சில முறை எனக்கு போன் செய்தாள் ஷ்ரத்தா. அஃப்தாப் தன்னை துன்புறுத்துவதாக கூறினாள். வீட்டுக்கு வந்துவிடும்படி சொன்னேன். ஆனால் அவள் வரவேயில்லை" என கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.