"என் மகளை கொன்னவன தூக்குல போடுங்க".. இந்தியாவையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. கண்ணீர் மல்க பேசிய தந்தை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கியுள்ள ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஷ்ரத்தாவின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் உள்ள தனியார் கால்சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார் 26 வயதான ஷ்ரத்தா எனும் இளம்பெண். அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் அஃப்தாப் அமீன் பூனாவாலா. நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில் நாளடைவில் இருவருக்கிடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது. ஆனால் ஷ்ரத்தாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, காதலனுடன் டெல்லிக்கு குடியேறிய ஷ்ரத்தா அமீனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் தனது வீட்டினருடன் பேசுவதை ஷ்ரத்தா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார். தனது மகள் இருக்கும் இடத்தை அறிந்த அவர் அங்கு செல்லவே, வீடு பூட்டியிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மெஹ்ரவ்லி பகுதி காவல் நிலையத்தில் அமீன் தனது மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி அமீனை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையின் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, ரத்த கறையை போக்குவது மற்றும் உடல் பாகங்களின் இயக்கம் குறித்து அமீன் இணையத்தில் தேடியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது வீட்டிற்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கிய அமீன் அதில் ஷ்ரத்தாவின் உடலை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை இதுபற்றி பேசுகையில் தனது மகளின் மரணத்திற்கு பின்னால் லவ் ஜிகாத் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தன் மகளை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், டெல்லி போலீசை நம்புவதாகவும் இந்த வழக்கை சரியான திசையில் டெல்லி காவல்துறையினர் விசாரிப்பார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஷ்ரத்தாவின் தந்தை தெரிவித்திருக்கிறார்.