"நீங்க 21 நாளுனா..." "நாங்க 2 மாசம்..." "நோ இன்கம்மிங்... நோ அவுட் கோயிங்..." 'பக்கா பிளானிங்...' உலக நாடுகளுக்கு 'சவால்' விடும் 'அமெசிங் வில்லேஜ்...!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 26, 2020 04:27 PM

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கிராமம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெளியுலக தொடர்பை துண்டித்து கொண்டுள்ளது.

Villager who disconnected next 2 months due to corona fear

எம்.கோலஹல்லி என்ற கிராமம் கர்நாடக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் பெங்களூருவில் இருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெளியுலக தொடர்பை துண்டித்துக் கொள்ள இந்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் இந்த கிராமத்தினர் அனைவரும் கூடி ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.  இதற்கு தேவையான ஏற்பாடுகளை 100 தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்வகளைக் கொண்டு 4 தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு உடல்நலம், பொது சுகாதாரம், பாதுகாப்பு, தகவல்தொடர்பு போன்றவற்றிற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

கிராமத்திற்குள் யாரும் உள்ளே வராத வகையிலும், வெளியே செல்லாத வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராம எல்லையில் செக்போஸ்ட்டுகள் அமைத்து வெளியிலிருந்து யாரும் வந்து விடாத வகையில் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் 700 லிட்டர் பாலை கேன்களில் சேகரித்து ஊர் எல்லையில் வைத்து விடுகின்றனர். அதனை வெளியில் இருந்து வரும் வேன்கள் எடுத்துச் செல்கின்றன. இதேபோல் தங்கள் தேவையை தவிர்த்து மிஞ்சும் காய்கறிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு அதையும் ஊர் எல்லையை தாண்டி வைத்து விடுகின்றனர்.

மேலும், மளிகை, காய்கறி, பழங்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், 2 மாதங்களுக்கு தேவையானவற்றை முன்னரே வாங்கி வைத்துக் கொண்டனர்.

இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்றவர்களும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர்.

ஒவ்வொரு நாள் காலையும் சாணம், கோமியத்தைக் கொண்டு ஊர் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்தில் இருந்து லண்டன் சென்று வசித்து வந்த நபரையும் திரும்ப அழைத்து, தனிமைப்படுத்தியுள்ளனர். நிலைமை சீரடையும் வரை வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : #CORONA #KARNATAKA #VILLAGE #DISCONNECTED