அடேய், என் 'பென்ஷன்' பணத்த என்னடா பண்ணி வச்சுருக்கே... 2 லட்ச ரூபா'வ காலி செய்த 'பேரன்'... தல சுத்தி நின்ன 'தாத்தா'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகெங்கிலுமுள்ள இளைஞர்கள், இன்றைய காலகட்டங்களில் மொபைல் கேம்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதிலும், தற்போது ஊரடங்கு என்பதால் வீடியோ கேம்களில் மொத்த நேரத்தையும் போக்கி வருகின்றனர். இதில், பப்ஜி எனப்படும் மொபைல் கேமிற்கு உலகளவில் அதிக ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 15 வயது சிறுவன், கடந்த ஜனவரி மாதம் முதல் பப்ஜி கேம் ஆடி வந்துள்ளார். அந்த கேமில், வரும் கேரக்டருக்கான உடைகள் மற்றும் இதர உபகரணங்களை வாங்க பணத்தினை செலவு செய்ய வேண்டும். அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து பள்ளி சீனியர் ஒருவரின் மூலம் கற்றுக் கொண்ட அந்த சிறுவன், தனது தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்து 30 முறை பணம் செலுத்தி கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 55 ஆயிரம் ரூபாய் வரை செலவளித்துள்ளார்.
அதற்காக, பேடிஎம் கணக்கை தனது தாத்தாவின் பெயரில் தொடங்கிய அந்த சிறுவன், தாத்தாவின் ஆவணங்களையும் அதில் இணைத்துள்ளார். எதேச்சையாக சிறுவனின் குடும்பத்தினர் தாத்தாவின் வங்கி கணக்கை பார்த்த போது, அதில் பணம் மாயமான விஷயம் தெரிய வந்துள்ளது. மேலும், அது சிறுவனின் தாத்தாவின் பென்ஷன் பணம் செலுத்த வேண்டி திறக்கப்பட்ட வங்கி கணக்காகும்.
இதுகுறித்து சிறுவனிடம் விசாரித்த போது, தான் இதுவரை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பப்ஜி கேம் மூலம் செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள், மொபைல் கேம் மூலம் பணத்தை செலவழிக்க கற்றுக் கொடுத்த சிறுவனின் சீனியர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். மேலும், தனக்கு பணம் செலவழிக்க கற்றுக் கொடுத்த சீனியருக்கும் தனியாக சிறுவன் பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் பப்ஜி கேம் விளையாட வேண்டி தனி சிம் ஒன்றை சிறுவன் வாங்கியதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். முன்னதாக சில தினங்களுக்கு முன், இதே போன்று 17 வயது இளைஞர் பப்ஜி கேம் மூலம் தனது தந்தையின் 16 லட்ச ரூபாயை செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
